Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்: அடித்துச் செல்லப்பட்ட 35 வீடுகள்!

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்: அடித்துச் செல்லப்பட்ட 35 வீடுகள்!
நேபாளத்தின் கோர்க்கா மாவட்டத்தில் புதீ கண்டகி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கு. படம்: பிடிஐ

சியூரிபாஸ் பகுதிக்கு மேலே நிலச்சரிவு ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவிப்பதாக மாவட்ட ஆட்சியர் கூறினார்.

பகிரவும் WhatsApp Facebook

நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில் உள்ள புதீ கண்டகி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 35-க்கும் மேற்பட்ட வீடுகளும், பாலங்களும் அடித்துச் செல்லப்பட்டன.

புதீ கண்டகி ஆற்றில் அதிகாலையில் திடீரென மண், பாறைகள் உள்ளிட்டவற்றை அடித்துக்கொண்டு வேகமாகப் பாய்ந்த வெள்ளத்தில் வடக்கு கோர்கா பகுதியில் உள்ள பல குடியிருப்புகள் சேதமடைந்தன. சல்லேரி, பையுகா, ஜகத் உள்ளிட்ட பகுதிகளில் 35-க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வெள்ளத்தில் சிக்கி இதுவரை உயிரிழப்புகள் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என்று மாவட்ட ஆட்சியர் தர்மேந்திர குமார் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

சியூரிபாஸ் பகுதிக்கு மேலே நிலச்சரிவு ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவிப்பதாக மாவட்ட ஆட்சியர் கூறினார். அதேநேரத்தில், வெள்ளம் ஏற்பட்டதற்கான துல்லியமான காரணம் இன்னும் தெரியவில்லை. சும்புநுப்ரி ஊராட்சியின் 6-வது வார்டில் உள்ள லோக்பா, சும்லிங் பகுதிகளுக்கு இடையே செல்லும் சியார் என்ற சிற்றாறு தடைப்பட்டிருக்கலாம் என்று உள்ளூர் மக்கள் சந்தேகிக்கின்றனர். நீரோட்டம் தடைப்பட்டு, பின்னர் திடீரென வெளியேறியதால் வெள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என்பது அவர்களின் கருத்து. ஆனால், இதை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
அதிகாலை 4 மணியளவில் ஆற்றுப் பகுதிகளில் இருந்து பலத்த இரைச்சல் கேட்டதாக மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து சும்லிங், லோக்பா உள்ளிட்ட ஆற்றங்கரையோர குடியிருப்புகளில் இருந்தவர்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வீடுகளை விட்டு வெளியேறினர். அப்பகுதி விடுதிகளில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகளும் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றனர்.

வெள்ளத்தில் சும்புநுப்ரி ஊராட்சியின் 3-வது வார்டில் உள்ள நியாக்செட் பகுதியையும், பிலிம் சந்தையையும் இணைக்கும் பாலம் அடித்துச் செல்லப்பட்டது. ஆற்றில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்ததால், மீட்புப் பணிகள், நிவாரணப் பொருள்களை எடுத்துச் செல்லுதல், மக்களை வெளியேற்றுதல் ஆகியவற்றுக்காக ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டதாக நேபாள உள்துறை அமைச்சர் சுதன் குருங் தெரிவித்தார். நேபாளக் காவல் துறை, ஆயுதக் காவல் படை மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆற்றங்கரையில் வசிப்பவர்களை எச்சரிக்க ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. மக்கள் தாமதிக்காமல் உயரமான பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தற்போதைய வெள்ளத்தில் சேதமடைந்த வீடுகள், பாலங்கள் மற்றும் பிற கட்டமைப்புகளின் முழுமையான விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.


முந்தைய செய்தி
மொசாம்பிக்கில் உணவுப் பற்றாக்குறை தீவிரமடையும் அபாயம்
அடுத்த செய்தி
ஏலத்துக்கு வருகிறது மைக்கேல் ஜாக்சனின் கையுறை! எதிர்பார்ப்பு எவ்வளவு தெரியுமா?

தொடர்புடைய செய்திகள்